தேவகோட்டை மணிமுத்தாறில் எழுவங்கோட்டை கிராமத்தையொட்டி குவாரி அமைத்து மணல் விற்பனை செய்ய அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. கடந்த வாரம் பொதுப்பணித்துறையினர் மணல் அள்ளியபோது கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததை தொடர்ந்து சிவகங்கையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்ததில் அரசு விதிமுறைப்படி மணல் அள்ளுவதென முடிவு செய்யப்பட்டது. 3 அடி ஆழத்திற்கும், அரசு நிர்ணயித்த கட்டணமான ஒரு யூனிட் ரூ. 320 க்கு மணல் ஏற்றுவதென முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து உதவி பொறியாளர் பஞ்சவர்ணம் மேற்பார்வையில் நேற்று காலை முதல் மணல் குவாரி துவங்கியது.
அரசின் கட்டணத்திலேயே லாரி, டிராக்டர்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. டிராக்டரில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 320 ம், லாரிகளுக்கு இரண்டு யூனிட் ரூ. 627. 40 பைசாவிற்கு ரசீது போடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. சிலர் டி.டி.,க்களை எடுத்து வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்க முயற்சி செய்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே போலீசார் தலையிட்டு தடுத்தனர். பொதுபணித்துறையினரிடமே பணம் செலுத்தி ரசீது போடப்பட்டது.உதவி கோட்ட செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.நேற்று மாலை ஏராளமான லாரி,டிராக்டரில் மணல் அள்ளி செல்லப்பட்டது.