தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மனைவி வடிவுக்கரசி என்பவர் போட்டியிடுகிறார். ராமநாதன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவாக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கேசவன், தேவகோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த ராமநாதனை, போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராமநாதன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.