தேவகோட்டை : தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாறில் அரசு மணல் குவாரி உள்ளது. மணல் அள்ளிச் செல்லும் வெளியூர் லாரி, டிராக்டர்கள் எழுவங்கோட்டை வழியே செல்லக்கூடாது என அதிகாரிகள், கிராமத்தினர் முன்னிலையில் பேசிமுடிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை வெங்களூர் அருகே கூனவயலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் டிராக்டரில் அந்த வழியாக மணல் ஏற்றிச் சென்றுள்ளார். எழுவங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் தனது நண்பர்களான தச்சக்குடி கார்த்திகேயன் (23), பாவனக்கோட்டை ஸ்டாலின் (26), உஞ்சனை மணி(22), காரைக்குடி தினகரன் (22) ஆகியோருடன் எழுவங்கோட்டைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அந்த வழியாக வந்த நடுவிக்கோட்டையைச் சேர்ந்த பெரியசாமி( 38) யையும் தாக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் ஐந்து பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தாலுகா எஸ்.ஐ. கருப்பையா 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். காயமடைந்த பெரியசாமி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.