தேவகோட்டை சகாயமாதா ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்டது பனிப்புலான்வயல் மாதா கோயில். இங்கு வழிபாடு நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்போதிருந்த உதவி ஆட்சியர் 145 தடை உத்தரவை பிறப்பித்தார்.
இதனால் அந்த ஊர் மக்கள் புதிதாகக் கட்டிய கோயிலை திறக்க முடியாமல் இருந்தனர். இதுகுறித்து சிவகங்கை மறை மாவட்டம் சார்பில் பல முறை கிராம மக்களுடன் பேச்சு நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந் நிலையில், சகாயமாதா ஆலயப் பங்குத் தந்தை பாதுகாப்பு கருதி அந்த கிராமத்துக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை அந்த ஊரைச் சேர்ந்த நூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சகாயமாதா ஆலயத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து டி.எஸ்.பி கணேசன், வருவாய் ஆய்வாளர் மாணிக்கவாசகம் உளளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, அவர்களுடனும் பங்குப் பணியாளருடனும் பேச்சு நடத்தினர்.
இதில் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு நடத்தலாம் என்ற போலீஸôரின் கருத்தை ஏற்க கிராம மக்கள் மறுத்து விட்டனர். இதன் பின்பு, அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து நாங்கள் அனைவரும் விடுதலைச் சிறுத்தை கட்சி முன்னிலையில், வேறு மதத்துக்கு மாறப் போவதாகத் தெரிவித்தனர். அப்போது விடுதலைச் சிறுத்தை கட்சி தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் ஜேசு ராஜேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் இரும்பொறை, ஒன்றியச் செயலாளர் சேவியர், துணைச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.