தேவகோட்டையில் போலி மதுபானம் தயாரித்து வந்த கும்பலை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 525 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள சின்ன துகவூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (33). இவர் கோவை டாஸ்மாக் பாரில் வேலை பார்த்தார். இவரது நண்பர்களான ஆண்ட்ரி வயலைச் சேர்ந்த சந்திரசேகர் (40), திருப்புத்தூர் கண்ணன் (38), கடம்பான்குளம் நடராஜன் (34), தமிழரசு (40)ஆகியோர் அங்கு பல்வேறு பணிகளில் இருந்தனர்.
பாரில் வருமானம் வருவதை அறிந்த அலெக்சாண்டர், மற்ற நான்கு பேர் துணையுடன் போலி மதுபானம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக, தேவகோட்டை அருகே வலங்காவயலை சேர்ந்த அற்புதம் என்பவரது தோட்டத்தை 50 ஆயிரத்திற்கு குத்தகைக்கு எடுத்தனர். விவசாயம் செய்வது போல், யாருக்கும் தெரியாமல் போலி மதுபானம் தயாரித்தனர். இதற்காக, கேரளாவை சேர்ந்த தாசிடம் எரிசாராயம், சென்னையில் இருந்து போலி லேபிள்களை வாங்கியுள்ளனர். இங்கு தயாரிக்கும் போலி மதுபானங்களை கோவைக்கு அனுப்பி, அங்குள்ள டாஸ்மாக் பார்களில் விற்றுள்ளனர். போலீசார், பார்களில் நடத்திய சோதனையில், போலி மதுபானம் விற்பதும்,தேவகோட்டையில் தயாரித்த விபரமும் தெரிந்தது. இது குறித்து சிவகங்கை கூடுதல் எஸ்.பி., கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அவரது தலைமையில், டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆத்மநாபன், சரவணன், போலி மதுபான ஆலைக்கு சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த கும்பல், அங்கிருந்து தப்பியது. தோட்டத்து வீட்டில் இருந்த கலாதேவியிடம் விசாரித்தனர். அவரது தகவல்படி, காரில் தப்பிய அலெக்சாண்டர் உட்பட 5 பேரையும் கைது செய்தனர். பறிமுதல்: ஆலையில், 15 பிளாஸ்டிக் கேனில் பதுக்கி வைத்திருந்த 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 525 லிட்டர் எரிசாராயம், 5,000 மதுபாட்டில்கள், 3,400 பாட்டில் மூடி, 150 போலி லேபிள், தமிழக அரசு எம்பளம் பொறித்த 400 ஹாலோ கிராம் லேபிள், டூவீலரை பறிமுதல் செய்தனர். கூடுதல் எஸ்.பி., கூறுகையில், “” எஸ்.பி., அனில்குமார் கிரி உத்தரவுப்படி, இக்கும்பலை பிடித்தோம். அவர்களுக்கு எரிசாராயம், லேபிள்கள் சப்ளை செய்த இருவரை பிடிக்க, போலீசார் சென்னை, கேரளா விரைந்துள்ளனர். இதில் தொடர்புள்ள இன்னும் சிலரை பிடித்து, நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.